“அறிகுறிகள் நோயல்ல”
நவீன விஞ்ஞான காலத்தில் நம்மை மலைக்கவைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், பயன்பாட்டுக் கருவிகள், வாகனங்கள், வான ஊர்திகள், சீறும் இராக்கெட், மனித சமுதாயத்தை அழிக்கும் அணுவிசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் பிரம்மிப்பானவைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. இதன் உபயோகத்தை நாம் நிச்சயமாக அனுபவிப்பதில் சந்தோஷிக்கிறோம். அவற்றால் மன நிறைவும், உடல் சந்தோசம் அடைவதும் உண்மைதான். ஆனால் இவற்றை நம் உடலுக்குள் சொருகி, குத்தி, தைத்து, உள்ளே வைத்து இயங்க வைப்பதையும் நாம் விஞ்ஞானப்பூர்வமானது என்று நினைப்பதுதான் வேதனைக்குரியது. உண்மையில் அது விஞ்ஞானப்பூர்வமானது என்றால் இறந்த எந்த ஒரு மனிதனையாவது குறைந்தபட்சம் ஒரு வாரம் அவனின் வாழ்நாளை நீட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏனெனில் உயிருடலில் நம் கருவிகளின் இயக்கம் மனவுணர்வுக்கு இணக்கமாக இயங்க இயலாது. ஏன் இயங்காது என்றால் - நம் ஒவ்வொரு உறுப்பும் அதன் இயக்கமும் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் நிமிடத்திற்கு இத்தனை முறை இயங்குகிறது என்பது போல் இல்லாமல் நம் மனதின் உணர்விற்குத் தக்கபடி இயக்க முறை கூடியும், குறைந்தும், நின்றும் நிதானித்தும், வேகமாகவும், உள்மன உணர்வுக்குத் தக்கபடி மாறி இயங்கும் தன்மையுடையது.
உதாரணத்திற்கு இருதயம் இயங்கும் விதத்தை எடுத்துக்கொள்வது இருப்பதிலேயே கணக்கிட மிக எளிது. நம் மனோ நிலைக்குத் தகுந்தாற்போல் நம் உடல் இயக்கத்திற்குத் தகுந்தாற்போல் இருதயத்தின் துடிப்பு 30 முதல் 250 வரை கூட குறைந்தும் கூடியும் இயங்குவதை பார்த்திருப்போம். அதாவது நீங்கள் தூங்கும் தறுவாயிலும், தூங்கி விழித்த உடனேயும் உங்கள் நாடியைப் பிடித்து 15 நொடிக்குள் எத்தனை முறை துடிக்கிறது என்று ஒரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை எடுத்து எண்ணிப் பாருங்கள். அதேபோல், மதியம், மாலை சமயங்களிலும், சந்தோசம், கோபம் போன்ற மன உளைச்சல் உள்ள சமயங்களிலும் அதே 15 வினாடிக்குள் எண்ணிப் பாருங்கள். அதன் எண்ணிக்கை 2 அல்லது 3 மடங்கு கூடி இருக்கலாம். இன்னும் உடல் தன்னைச் சமப்படுத்த முயற்சிக்கும்போது அதாவது சுரத்திலும், உடல் உபாதையின் வலிகளின்போதும், அடிபட்டபோதும் அதே துடிப்பின் எண்ணிக்கை 3-4 மடங்கு கூடியிருப்பதை அறியலாம்.
குழந்தைகளின் சுரம் சமயத்தில் பார்த்தால் நாடியின் எண்ணிக்கை ஒரு நிமிடத்தில் 150 முதல் 250 வரை இருப்பதை மருத்துவ உலகம் நன்கு அறியும். இதை அளக்க கருவியும், இரத்த அழுத்தத்தை அளக்க கருவியும் இன்னும் எண்ணற்ற கருவிகளையும் கையாளும் மருத்துவ உலகம் விஞ்ஞானப்பூர்வமானது என்று விளம்பரம் செய்து கொள்வது எவ்வளவு கேலிக்கூத்தானது என்றால் இந்த அடிப்படை மாற்றம் கூட உணர்த்தப்படாததாக இருப்பதுதான்.
நாம் நினைக்கலாம் - நமக்கு அக்கருவிகள் மிகத் துல்லியமாகத்தானே காட்டுகின்றன அதில்அறிவியல் நமக்கு பயன்படுகிறதல்லவா என்கிறார்கள் என் நண்பர்கள். எண்ணிக்கையை வைத்து என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, எண்ணிப் பார்த்து அதை சாதாரண மனநிலையில், உடல் நிலையில் உள்ளவர்களுக்கு இணையாகக் கொண்டு வர முயற்சிப்பதிலேதான் நாம் நம் உடம்பின் உள்வேலையில்- தானியங்கி வேலையில், உயிர்ச்சக்தியின் வேலையில் குறுக்கீடு செய்கிறோம். அதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிறீரா?
உதாரணத்திற்கு ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை - என்ன நடந்திருக்கும் - அவ்வுடலில் உண்ட உணவு, முறையாக கழிவு பிரிக்கப் படாமல், தேங்கி நச்சாகியிருக்கலாம். அவை உடலில் தங்கிவிட்டால் உடலே நோய்க்கு ஆட்படலாம். ஆகவே அதை வெளியேற்ற தற்சுழற்சி வேகத்தை ஒவ்வொரு உயிர் அணுவும் சுழற்சியில் கூடி சூடாகி வெளியேற்றும். எனவேதான் தூங்காத உடலில் உஷ்ணம் கூடியிருக்கும். இது தெரியாதவரை சூட்டைக் குறைக்க, அதாவது காய்ச்சலைக் குறைக்க உடலின் செயலை, சக்தியை அழிக்க மருந்துண்டால் கெடுதலில்தான் முடியும்.
எந்த ஒரு பொருளைக் கொண்டும் மருந்தாக பயன்படுத்தி உடலின் உயிர்ச்சக்தியை அதிகரிக்க முடியாது - உணவைத் தவிர. மருந்தைக் கொடுத்தால் உயிர்ச்சக்தி சேதமடையுமே தவிர, ஊக்கம் பெறாது. அதனால் தான் அதிய இரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுத்து குறைக்க முடியுமே தவிர குறைந்த இரத்த அழுத்தத்தை கூட்ட முடிவதில்லை.
மற்றபடி உயிர்ச்சக்தியின் இயக்கத்தை திசை திருப்ப முடிகிறது. மருந்துகளால்- அதாவது உயிர்ச்சக்திக்கு அதன் (முன்மை) முக்கியத் தேவையை உணர்ந்து, அதில் இருக்கும் (உ-ம்) சுவாசம், இருதய இயக்கம், உடல் முழுக்க இருக்கும் தானியங்கி தசைநார்கள் இவை யாவும் தன் இயல்பில் உயிர்ச்சக்தியின் சேதமடையாத வழியில் இயங்குவது அதன் இயல்பு. அதைவிட்டு நாம் மருந்துப் பொருளால் நம் கணிப்புப்படி, நம் விருப்பப்படி மாற்றிவிட்டோம் என்றால் உயிர்ச்சக்தியில் பங்கம் (கேடு) ஏற்படும்.
எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் உணவு நன்றாக செரிக்கவேண்டும் என்பதற்காக நாம் ஜீரண தூண்டி (Tonic) சாப்பிடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பின் என்ன நடக்கும் என்று பார்த்தால், தானே சுரக்க வேண்டிய ஜீரண நீர்கள், பலவந்தமாக - வேகமாக சுரக்கவைக்கப் படுவதால், உடல் முழுக்க ஒரு ஓட்டுமொத்த சோம்பலையோ அல்லது தூக்க நிலையையோ ஏற்படுத்தும். அதாவது கல்லீரல் பலவீனமடையும். ஏனெனில் இயல்பாக சுரக்க வேண்டிய ஜீரண நீரை அடித்து சுரக்க வைப்பதுதான் வுழniஉ என்ற உண்சாராயம் கலந்த அந்த பொருளினால் விரைவான நொதித்தலில் வயிறு தடுமாறி மிக துரிதமான சுரப்பை செய்ய வேண்டியதால் உடல் சமநிலை கெடுகிறது. சமநிலையில்லாத உடல் ஆரோக்கியம் கெட்ட உடலே. நம் உடலில் உயிர்ச்சக்தி சமநிலை (ர்ழஅநழளவயவiஉ) தவறாத அளவு எப்பொழுதும் இயக்க உடல் முழுக்க தானியங்கி சக்தி இயற்கையாக இயங்கிக்கொண்டு இருப்பதுதான் அதன் இயல்பு என்பதை நாம் அறிந்தால் ஒரு ஜீரண ஊக்கி (Tonic) யால் உண்டாக்கும் உடலின், உயிர்ச்சக்தியின் சிதைவை உணரலாம். புரிந்துகொள்ளலாம். ஜீரண தூண்டிக்கே இந்த நம் உடலின் நிலை இதுவென்றால், மருந்துகளால் என்னவாகும்?
நாம் இனி ஒவ்வொரு வலியும் வரும்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தலையில் வலிக்கிறது என்றால் நாம் உடனே ஒரு மருந்து சாப்பிடுகிறோம். தலைவலி தெரிவதில்லை. இது நல்லதா? வலி என்ற உணர்வு நமக்கு உணராமல் இருப்பது நல்லது என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அந்த வலி எப்படி போனது, அல்லது மறைந்தது என்று நாம் அறிந்திருந்தால் அதை விரட்ட மருந்து என்ற விஷத்தை சாப்பிடவோ, மேற்பூச்சாக பூசவோ செய்யமாட்டோம். அப்படியென்றால் வலி ஏன் வருகிறது என்பதை இன்றைய மருத்துவ அறிஞர்களே கண்டறிந்து சொல்வதென்னவென்றால் எங்கெல்லாம் நம் உடல் திசுக்களில் தேவையற்ற நம் உயிருக்கு கேடு செய்யும் விஷக் கழிவுகள் சேர்ந்துள்ளதோ அதை வெளியேற்றாமல் உடலும் , உயிர்ச்சக்தியும் ஓய்வதில்லை. ஆகவே, அதை வெளியேற்றும் செயலில்தான் அது வலியாக நம்மால் உணரப்படுகிறது. அது ஏன் வலியாக உணர்த்த வேண்டும். எளிய முறையில் உண்டான கழிவானால் அதை சிறுநீராகவோ, மலமாகவோ, வேர்வையாகவோ, சளியாகவோ, கண்ணீராகவோ எளிதில் வெளியேற்றுவது நம் உயிர்ச்சக்தியின் அன்றாட அடிப்படைப்பணி, அப்படி வெளியேற்ற முடியாத அத்தகைய காலம் கடந்த கழிவுகளாக மாற்ற முடியாதவைகளை உடல் திசுக்களில் தங்கிய, கிரகிக்க முடியாத - தேங்கிய கழிவுகளை வெளியேற்றும்போது அங்கு இணக்கமான, இயல்பான செயல்பாடு இருக்கும்போது அவை மிதமான வலி உணர்வோடு வெளியேறிவிடும். அதையே நாம் நம் உடலின் - உயிரின் - உணர்வின் தேவையை இயல்பாக இருந்து உணர்ந்து வேறு எந்த வேலையையும் நம் உடலிற்கு, மனதிற்கு கொடுக்காமல் விட்டுவைக்கும்போது அந்த மிதமான வலியும் இதமாக மாறிவிடும்.
இதை விடுத்து இந்த மிதமான வலிக்கு மருந்துப் பொருள், இரசாயன கலவையோடு உணவு என்று எடுத்துக் கொள்ளும்போதுதான் நம் உயிர்ச்சக்தி அந்த தேங்கிய கசடை வெளியேற்றும் செயலை விட்டு இந்த மருந்து விஷம் - இரசாயனங்களால் நிலைகுலைந்து செய்வதறியாது பலவீனமடைகிறது. அதன் விளைவாக, அழுக்குடன் மருந்து - இரசாயனங்களும் சேர்ந்துகொள்கின்றன. மீண்டும் உயிர்ச்சக்தி தன்னை பலப்படுத்திக்கொள்ளும் காலம் வரை அதாவது சுமார் 2-3 வாரங்களில் இருந்து, 2-3 மாதங்களுக்கு, சிலருக்கு 6 மாத காலம் கூட எடுத்துக்கொள்ளும் அவரவர் உடலின் - உயிர்ச்சக்தியின் வலிமையைப் பொறுத்தது.
அத்தகைய பலம் பெற்ற உயிர்ச்சக்தி மீண்டும் தன் வெளியேற்றும் செயலில் ஈடுபட முயற்சிக்கும்போது மீண்டும் வலியை நாம் உணர்வோம். அல்லது கடுமையான காய்ச்சல் வந்து, வாந்தி, பேதி, கூட உண்டாக்கும். ஆக காய்ச்சல் என்பது, கழிவு - கசடுகளை உடல் திசுக்களில் இருந்து வெளியேற்ற வெப்பநிலையை உயர்த்துவதால் வேலை எளிதில் நடத்தப்படும் என்பதற்காகத்தான். நாம் அதை உணராமல் வாந்தி, பேதி, சுரத்தை அடக்கும் மருந்து உண்டால், உயிர்ச்சக்தி திணறிப்போய் செய்வதரியாது தடுமாறும். அப்படி ஒவ்வொரு முறை சுரத்திற்கும், வாந்தி பேதிக்கும் மருந்து உண்டதாலேயே, விதவிதமான கசடும், விதவிதமான விஷத்தேக்கமும் உடலில் சேர்வதால் மீண்டும் மீண்டும் முன்பைக் காட்டிலும் மிக அதிகமான சுரமும், கடுமையான வலி, வேதனையையும் ஏற்படுத்தும் உச்சபட்ச நோயாக மாறுகிறது.
இப்படி தேக்கமுற்ற கழிவுகளை, கசடுகளை, விஷங்களை வெளியேற்ற முடியாமல் தடுமாறும்போது உடலில் எல்லா சுரப்பிகளும் தன்னை அதற்கேற்றாற்போல் தகவமைக்கிறது. அதைத்தான் நாம் வெவ்வேறு பெயர் வைத்து கேஸ்டிஸ், (பிட்யூட்டரி, அட்ரினல்), தைராய்டு, ஆர்தரைட்டிஸ், நெப்ரைட்டிஸ், அப்பெண்டைடிஸ் என்று கூறுகிறோம். இதேபோல்தான் சுரங்களுக்கும் பெயர்வைக்கப்படுகின்றன.